வேங்கை - திரைப்பட விமர்சனம்
- Details
- Published on Thursday, 07 July 2011 15:38
- Hits: 3049
ஹிட் படங்களாக கொடுப்பதில் வல்லவரான ஹரியின் இயக்கத்தில் அடுத்து வெளியாகியுள்ள படம் தான் இந்த "வேங்கை".
விஜயா புரடெக்ஷன்ஸ் சார்பில் இதனை தயாரித்தவர் பி. பாரதி ரெட்டி. கதை, திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளார் ஹரி. தனுஷ்,தமன்னா, ராஜ் கிரண், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.டி. விஜயன் எடிட்டிங் பொறுப்பினை மேற்கொண்டுள்ளார். இதற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். இதனை தயாரித்த விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவனமே இப்படத்தை வெளியிடுகிறது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள பாமரக்குலம் என்னும் கிராமத்தில் கதை துவங்குகிறது. அப்பகுதி எம்.எல்.ஏ-வாக வருகிறார் பிரகாஷ் ராஜ். ராஜ் கிரண் அந்த பகுதியில் வாழும் பெரும் புள்ளி. அவரது மகனாக வருகிறார் தனுஷ். ராஜ் கிரணுக்கும், ராஜ் கிரண் ஆதரவில் MLA ஆகும் பிரகாஷ்ராஜுக்கும் ஒரு புதிய இரயில் நிலையம் கட்ட வேண்டும் என்ற பிரச்சனையில் கருத்து வேறுபாடு துவங்குகிறது. ராஜ்கிரனின் ஆதரவால் MLA ஆனதால் தன்னால் எதையும் பேச முடியவில்லை என கோபமடையும் பிரகாஷ் ராஜ், ரயில் போகும் பாலத்தில் குண்டு வைக்கிறார்.அந்த பழியை தூக்கி பக்கத்துக்கு கிராமத்தின் மீது போட்டு இரு கிராமத்திற்கும் கலவரம் உண்டாக்க முனைகிறார் , இந்த குண்டு வெடிப்பிலிருந்து இரயிலையும், அதிலுள்ள பயணிகளையும், பத்திரமாக காப்பாற்றுகிறார் தனுஷ். அது மட்டுமில்லாமல், அந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து ஒப்படைகிறார் . தனுஷின் அறிமுகத்துடன் முதல் பாடல் இடம் பெறுகிறது.
தனுஷ் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருப்பதால் தனுஷின் மீது கொண்ட அக்கறையினால் அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்கிறார் ராஜ்கிரண். இதை ஏற்றுக்கொள்ளாத தனுஷ், அதற்கு பதிலாக திருச்சியிலுள்ள மாமா வீட்டிற்கு செல்வதற்கு தயாராக உள்ளதாக கூறுகிறார். இதற்கு ராஜ்கிரணும் சம்மதிக்க, தனுஷ் திருச்சி செல்கிறார். அங்கு செல்லும் வழியில் தமன்னாவை பேரூந்தில் சந்திக்கிறார் தனுஷ். நீங்கள் தானே ராதிகா என்று கேட்டதற்கு, " இல்லை, நான் கேரளாவை சேர்ந்தவள் என்று மழுப்பி மறைந்துவிடுகிறார் தமன்னா.
இதற்கிடையில் தமன்னாவை மீண்டும் சந்திக்கும் தனுஷ், மீண்டும் நீங்க ராதிகா தானே என்று கேட்க, "இல்லை" என்று மறுக்கிறார் தமன்னா. இதற்கிடையில், தமன்னாவின் தோழி, "ராதிகா பஸ் வந்துருச்சு" என்று சொன்னதும், தமன்னா தான் ராதிகா என்று தெரிந்து கொள்கிறார் தனுஷ் . ராதிகாவிடம் பேசுவதற்காக, அவளை ஹோட்டலுக்கு வருமாறு தோழியின் மூலம் தூது அனுப்புகிறார் தனுஷ். முதலில் மறுக்கும் ராதிகா, பிறகு ஒப்புக் கொள்கிறார். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, தமன்னாவின் மாமா அவரை பார்த்து விடுகிறார். அதனால் தமன்னாவின் மாமா மற்றும் அத்தை அவரிடம் பேசாமல் இருக்க மீண்டும் அடுத்த நாள் தமன்னாவை கல்லூரிக்கு சென்று பார்கிறார் தனுஷ். அப்போது மிகவும் மனமுடைந்த தமன்னா, "உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா, என்னை ஏன் இப்படி கஷ்டபடுத்துற என்று கூறிவிடுகிறார். அதனால் தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, இனிமே நான் உனக்கு தொந்தரவா இருக்க மாட்டேன். இன்னும் ஆறு மாதம் கழிச்சி தான் உன்ன வந்து பார்பேன் என்று சொல்லிவிட்டு கண்ணீர் மல்க செல்கிறார் தனுஷ்.
தமன்னாவை ரவுடியிடம் இருந்து காப்பாற்ற அடிவாங்கும் தனுஷ் ,கல்லூரியின் ஆசிரியருக்கு பிரச்னை என்றதும் அவர்களை அடிக்க இதனால் பயப்படும் தமன்னா தன் காதலை சொல்லாமல் செல்கிறார் , தனுஷ் திருச்சியில் இருக்கும்போது, ராஜ்கிரணுக்கும் பிரகாஷ் ராஜுக்கும் ஒரு நிலம் வாங்கும் விவகாரத்தில் ஒரு சண்டை உருவாகிறது. அந்த சண்டையில் பிரகாஷ் ராஜை ராஜ் கிரண் அறைந்து விட ஆத்திரம் அடையும் பிரகாஷ் ராஜ் , ராஜ் கிரனை பழி வாங்க ஒரே வழி அவர் மகனை கொள்வதுதான் என முடிவு செய்து தனுஷை கொள்ள பிளான் செய்கிறார். அது திட்டமிட்ட கொலையாக தோன்றாமல், இயற்கையான மரணம் போல் இருக்க வேண்டும் என்று பொன்னம்பலத்திடம் ஆணை இடுகிறார்.
பிரகாஷ் ராஜ் ஆட்களுடன் உண்டாகும் சண்டையில் தனுஷ் பல பேரை கொலை செய்கிறார். இதனால் அவரை போலீஸ் கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்கின்றனர். இடை வேளைக்கு பிறகு எம்.எல்.ஏ-வாக இருந்த பிரகாஷ் ராஜ், மந்திரியாக ஹெலி காப்டரில் வந்து ராஜ் கிரண் வீடு முன் இறங்கி ராஜ் கிரனை கொன்று விடுவதாக மிரட்டுகிறார் ,சிறையில் இருந்து வெளியே வந்த தனுஷ் பிரகாஷ் ராஜின் வீட்டுக்கு சென்று ஒரு சவால் விடுகிறார், அது என்னவென்றால், 30 நாட்கள் காலகட்டத்துக்குள், நான் உன்னை வெட்டி சாய்த்துவிட்டால், உன் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். நீ என் அப்பா தலையை நீ சொன்ன மாதிரி வெட்டி சாய்த்துவிட்டால், என் குடும்பத்தை சார்ந்த அனைவரும் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்கள் என்று கூறுகிறார்.
இவர்களின் சபதத்தில் யார் வென்றார்கள் என்பதை தன் பர பரப்பான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார் ஹரி . பாடல்கள் சுமார். ஒளிப்பதிவிற்கு விசேஷமான பாராட்டுக்கள் அளிக்க வேண்டும். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் போன்ற எல்லா அம்சங்களையும் மண்மணம் மாறாமல், சுறுசுறுப்பான திரைக்கதையுடன் கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
அதே சமயம் ஒரே மாதிரியான கதை களம் ,ஒரே மாதிரியான திரைக்கதை பொறுமையை சோதிக்கிறது ,மீண்டும் சிங்கம் படம் பார்த்தது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை.
வேங்கை வேகம் கம்மி.
Related Gallery
Share:














