உடும்பன் – திரைவிமர்சனம்
- Details
- Published on Monday, 20 February 2012 17:45
- Hits: 476
நடிகர்கள்: திலீப் ரோஜர், சனா, கீத்திகா, சுனில், செந்தில்
இசை, எழுத்து, இயக்கம்: பாலன்
ஒளிப்பதிவு: கிச்சாஸ்
தயாரிப்பு: ஜெகன்நாதன் - மாடர்ன் சினிமா
படத்தின் கதை :
தனியார் கல்விக்கூடங்களில் நடக்கும் கொள்ளையை தைரியமாகச் சொல்லியிருக்கும் படம் தான் இந்த உடும்பன். ஹீரோவும் (பைக் ரேஸர் திலீப் ரோஜர்), அவர் குடும்பமும் திருட்டு தொழிலை செய்து வருகிறார்கள். ஹீரோவுடன் உடும்பு ஒன்றும் துணையாக உள்ளது.
ஒரு நாள் ஹீரோவும் உடும்பும் வழக்கம்போல போலீஸ் ஐஜி வீட்டுக்குப் திருடப் போகிறார்கள். ஆனால் அங்கே ஐஜியும் அவர் மனைவியும் தங்களிடமிருந்த பணம், நகைகளை தனியார் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்க இழந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் தன் திருட்டு தொழிலை பள்ளிக்கூடம் திறந்து, அதன் மூலம் சம்பாதிக்கலாம் என்று நினைத்து பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கிறான். ஆனால் ஹீரோ ஐஜி வீட்டில் திருட முயன்ற குற்றத்துக்காக சிறை செல்லும் போது, தன் அண்ணனிடம் பள்ளியை ஒப்படைத்துவிட்டு சிறைக்கு செல்கிறான்.
விடுதலையாகி வெளியே வரும்போது, அவனுடைய பள்ளிக்கூடம் நன்றாக வளர்ந்த நிலையில் மக்களிடமிருந்து நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடிப்பதில் நம்பர் ஒன்னாக திகழ்கிறது. இதனால் ஏழைகள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க படும் துயரங்களைப் பார்த்து மனம் மாறுகிறான் ஹீரோ.
ஹீரோயின் சனா பள்ளிக்கூடம் பற்றி ஆய்வுப் படிப்புக்காக வருகிறார். அப்போது ஹீரோ திலீப், சனாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைத்தால் தான் நம்முடைய காதல் நிறைவேறும் என கண்டிஷன் போடுகிறார் சனா.
கொள்ளையடிக்கும் பள்ளிக்கு எப்படி கடிவாளம் போடுகிறார்கள்...? அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற திட்ட்த்தை எப்படி நிறைவேற்றுகிறார்கள்...? என்பது தான் க்ளைமாக்ஸ்.
படத்தின் நிறை – குறைகள் :
இன்றைய கல்வி முறை எந்த அளவிற்கு இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை மிக அழகாக, தைரியத்தோடு ஒளிவு மறைவின்றி இந்த கதையை எடுத்ததற்கு இயக்குனர் பாலனுக்கு ஒரு சபாஷ்! பாராட்டுக்கள்.
ஹீரோ பைக் ரேஸ் வீரர் திலீப் ரோஜருக்கு, இது முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நன்றாக நடித்திருக்கிறார். ஹீரோயின்கள் சனா, கீந்திகா தங்கள் பாத்திரங்கள் அறிந்து நடித்திருக்கிறார்கள். ஹீரோவின் அண்ணனாக வரும் சுனில் நடிப்பில் சாதித்திருக்கிறார். ஹீரோவின் அம்மா கம்பம் மீனா, நண்பனாக வரும் செந்தில் அனைவருமே மனதில் இடம்பிடிக்கிறார்கள். கிச்சாஸ் ஒளிப்பதிவு, விடி விஜயன் எடிட்டிங் இரண்டும் படத்துக்கு பக்க பலம். இயக்குநர் பாலனே படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் இரண்டாம் பாதியில் தேவையற்ற சில பாடல்கள், லாஜிக் மீறல்கள், இது நக்கலா சீரியஸா என்று யோசிக்க வைக்கும் சில காட்சிகள் இவைகளை தவிர்த்திருக்கலாம்.
Share:












