7ஆம் அறிவு
- Details
- Published on Friday, 08 July 2011 19:10
- Hits: 2419
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் ‘ஏழாம் அறிவு’.
இப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த அபிநயா நடிக்கிறார்.
விஞ்ஞானி, சர்க்கஸ் கலைஞர், புத்த பிட்சு என்று மூன்று வேடங்களில் சூர்யா நடித்து அசத்த இருக்கிறார். கஜினி படத்தில் வித்தியாசமான வில்லனை அறிமுகப்படுத்திய ஏ.ஆர். முருகதாஸ், இப்படத்தில் வியட்நாமிலிருந்து வில்லனை இறக்குமதி செய்திருக்கிறார்.
இவரது பெயர் ஜானி ட்ரி நுயன் (Johnny Tri Nguyen). கராத்தே, குங்பூ உள்ளிட்ட பலவிதமான தற்காப்புக் கலைகளை கற்றிருக்கிறார் ஜானி. ‘கிராடில் 2 தி கிரேவ்’ (Cradle 2 the Grave) என்ற ஹாலிவுட் படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். ஸ்பைடர் மேன் – 2 படத்தில் ஸ்பைடர்மேனுக்கு டூப் போட்டு நடித்தவர் என பல சிறப்புகளை உடையவர் ஜானி.
சூர்யாவிற்கு வில்லனாக ஜானியை இறக்குமதி செய்திருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருப்பது மட்டுமின்றி, நமது முதுகுத் தண்டையே சில்லிட வைத்து விடுமாம்.
இப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சியில், வில்லன் நடிகர் ஜானி டிரை நுயென்னுடன் மோதுகிறார். இந்த சண்டைக் காட்சியை குங்பூ தற்காப்பு கலையை மையமாக்கி எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
எந்திரன் படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்த நிறுவனத்தில்தான், இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளையும் வடிவமைத்திருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். எந்திரனை விட பலமடங்கு இப்படம் கிராபிக்ஸில் மிரட்ட இருக்கிறதாம்.
இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கா 1000 நடனக்கலைஞர்கள் ஆடியிருக்கிறார்கள். பல வகையிலும் இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவை கவனித்துக் கொள்ள, ஆண்டனி படத்தொகுப்பு வேலையினை செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜூலை மாத இறுதியில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. அறிவியல் புனைகதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டனவாம். தற்போது போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்டு மாத இறுதியில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.













